January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக அச்சமடைய வேண்டாம்” : கல்வி அமைச்சின் செயலாளர்

தீர்மானிக்கப்பட்டவாறு நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

முறையான சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றியே பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும், இதனால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப பெற்றோர் பயப்படத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் தரம் 6 முதல் 13 வரையான வகுப்புகளில் நாளைய தினம் தொடக்கம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும், இதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் பாடசாலை அதிபர்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேல் மாகாணத்தில் வசிக்கும் வெளி மாகணங்களிலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அந்த மாகாணத்தில் வசிக்கும் வெளிமாகாண பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கும் பாடசாலைக்கு செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

தேவையான வேலைத்திட்டங்கள் இன்றியே பாடசாலைகள் திறக்கப்படுவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதனால் முறையான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படும் வரையில் சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மாத்திரம் வகுப்புகளை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை தற்போதைய கொரோனா தொற்று அபாய நிலைமையில் பாடசாலைகளை திறந்து, மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியாகொட மீன் சந்தைய கொரோனா கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணியையும் உருவாக்கி விட வேண்டாமென்று கல்வி அமைச்சைக் கேட்டுக்கொள்வதாக  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.