October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வருகின்றனர்’: சிறிதரன் எம்.பி.

தமிழ்மக்கள் சுயத்தோடும் தங்களுக்கே உரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்த் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசாரமுமே உறுதிசெய்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பிட்டும் வடையும் உண்ட நிலையிலிருந்து பீட்ஸா உண்ணும் நிலைக்குக் கொண்டு வந்ததாக யாழ். தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே சிறிதரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் தங்களுக்குரிய நிலங்களில் தமக்கான சுயநிர்ணய உரிமையோடு வாழ்ந்த மக்களாவர்.அவர்கள் தமக்கே உரிய பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களோடு இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

எனினும், சிங்கள இனவாத நடவடிக்கைகளால் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது உணவுப் பழக்க வழக்கங்களையே இழந்து, தமது வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையிலும் தமது பாரம்பரியங்களை இழக்கக்கூடாது என்பதற்காகவே அம்மாச்சி போன்ற உணவகங்கள் மூலம் தமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரியொருவர் எமது மக்களைப் பிட்டும் வடையும் உண்டு கொண்டிருந்த நிலையிலிருந்து பீட்ஸா உண்ணும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம் என்று கூறியிருக்கின்றார்.

அவர்கள் சுயத்தோடும் இறைமையோடும் தங்களுக்கே உரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்த் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசாரமுமே நிலைநாட்டியிருக்கின்றன என்பதை அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்” – என்றார்.