
தமிழர் தாயகத்திற்காக உயிர்நீத்த உறவுகளுக்கே தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“தமிழர் நாட்காட்டியில் இந்த வாரம் மிகவும் முக்கியமான வாரமாகும், எனவே தமிழர் தாயகத்திற்காகவும், தமிழர் உரிமைக்காகவும் போராடி உயிர் நீத்த எமது உறவுகளுக்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்” ” தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயராக இல்லை, வழங்கவும் மாட்டார்கள். போர் குற்றங்களுக்கான ஆதாரங்களை தேட இவர்கள் ஒருபோதும் முன்வரப்போவதில்லை” என தெரிவித்தார்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கொடுக்காத அரசாங்கம் ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றது. அபிவிருத்திகள் என கூறிக்கொண்டு அதனை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கையாள்கின்றனர். எனினும் கடந்த 30 ஆண்டுகளாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளின் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தியை முறையாக எடுத்திருந்தால் பாகுபாடு இல்லாது உயர்ந்திருக்க முடியும். ஆனால் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் பொருளாதார ரீதியில் தலைதூக்க முடியாது போனது, எமது மக்கள் விவசாயம் செய்யவோ, மீன்பிடியில் ஈடுபடவோ முடியாது போனது. பெரும் அளவிலான எமது நிலங்கள் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டது. யாழ் மாவட்டத்தில் 30 வீதமான நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்தது. சரத் பொன்சேகாவிற்கு இது நன்றாக தெரியும் என்றார்.
தமிழர்களின் மாகாணத்தில் இதுதான் நடந்தது.இதுதான் உண்மைகள். இராணுவமும், அரசாங்கமும் போர் குற்றங்களை செய்துவிட்டு இன்றும் அடக்குமுறைகளை கையாள நடத்துகின்றனர் என்றபோது மீண்டும் சபையில் குழப்பங்களை ஏற்படுத்திய ஆளும் தரப்பு உறுப்பினர் ஆளாளுக்கு ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிக்கொண்டிருந்தனர். யுத்தத்தில் இருந்து விடுபட்ட பின்னர் எமது பகுதிகளுக்கு கிடைந்த அபிவிருத்தியை செய்திருந்தாலும் எமது மக்கள் சற்று தலைதூகியிருக்க முடியும்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் வடக்கு கிழக்கு மக்களை மேம்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.
தமிழ் மக்கள் நாட்டினை விட்டு வெளியேறினர், அதன் பின்னர் மீள் கட்டுமானத்திற்காகவும், அபிவிருத்திக்காகவும் வீதி புனரமைப்பிற்காகவும் நிதிகளை பெற்று அங்கு சிங்கள காலனித்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அரசாங்கம் சூழ்ச்சி செய்தது.
இதுதான் உண்மையாகும் என கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.