
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 151 பேர் ஆதரவாகவும், 52 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த 11 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டதுடன், அதன் இரண்டாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் 12 ஆம் திகதி முதல் இன்று வரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு அது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் அரசாங்க தரப்பினரும், எதிர்க்கட்சியை சேர்ந்த சிலருமாக 151 பேர் அதனை ஆதரித்து வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 52 பேர் அதனை எதிர்த்து வாக்களித்தனர்.
இதன்படி வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து 10 ஆம் திகதி மாலை வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வசிப்பு மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்க தரப்பினர் தீர்மானித்த போது, ரிஷாத் பதியுதீனை சபைக்கு அழைக்க நடவடிக்கையெடுக்காமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு வெளியிட்டனர்.
வாக்களிப்பின் போது ரிஷாத் பதியுதீனை சபைக்கு அழைத்து வர நடவடிக்கையெடுக்கப்படும் என்று சபாநாயகரினால் உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு அவர் அழைக்கப்படாது வாக்கெடுப்புக்கு செல்வது சட்டவிரோமாகும் என்றும் சபையில் ஒழுங்குப் பிரச்சனையை எழுப்பி, லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதன்போது சிறையில் இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினரான பிரேமலால் ஜயசேகர சபைக்கு வந்திருந்தமை எவ்வாறு என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல கேட்டார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, சுகயீனம் காரணமாக தன்னால் சபைக்கு வர முடியாது என்று ரிஷாத் பதியுதீன் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.