பாடசாலைகளில் கொரோனா பரவல் ஏற்படாது என்று அரசாங்கம் பெற்றோருக்கு உறுதியளிக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதுகுறித்த தமது அவதானங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ளது.
கொவிட்- 19 முதலாவது அலையைத் தொடர்ந்து பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது நடைமுறைப்படுத்தப்பட்ட ஒழுங்குகள் இம்முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
‘முறையான திட்டங்கள் எதுவுமின்றியே, அரசாங்கம் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க முயற்சிக்கின்றது’ என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முறையான திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு மாத்திரம் பாடசாலைகளை ஆரம்பிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது, அரசாங்கம் இதனைவிட அதிக கவனமெடுக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவைகள் சங்கம் மற்றும் லங்கா ஆசிரியர் சேவைகள் சங்கம் ஆகியனவும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.