
மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் உருவப்படத்திற்கு அவரது தாயாரோடு இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.
வல்வெட்டித்துறை கம்பர் மலையை சேர்ந்த சின்னத்துரை ரவீந்திரன், 1985 ஜனவரி 9 ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் நடந்த மோதலில் மரணத்தை தழுவியிருந்தார்.
மாவீரர் நாளில் அவரை நினைகூருவதற்கு அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான மகேஸ்வரி, நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றைய தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று காலை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சின்னத்துரை ரவீந்திரனின் உருவப்படத்துக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என சின்னத்துரை ரவீந்திரனின் தாயார் மகேஸ்வரி கேட்டுக் கொண்டார்.
மேலும் “எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுகின்றேன். துயிலும் இல்லத்திற்கு சென்று மகனுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவேன்.
எனவே நான் வீட்டில் விளக்கேற்றி எனது மகனுக்க அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.