இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக எரிக்கும் நடைமுறைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனுவொன்றைத் தாக்கல் செய்ததாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹைதீன் தெரிவித்துள்ளார்.
முள்ளிப்பொத்தானையில் அமைந்துள்ள தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் உணர்வுகளைப் பாதித்துள்ள ஜனாஸா எரிப்பு விவகாரத்துக்கு சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள தாம் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் எந்தவொரு நாடும் செய்யாத கட்டாய ஜனாஸா எரிப்பு நடைமுறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் தேசிய விடுதலை மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.