ஒரு மாத காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கொழும்பு வடக்கு அளுத்மாவத்தை பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக ஒரு மாதமளவில் குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முகத்துவார பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இப்பிரதேசம் மேலும் 14 நாட்களுக்கு முடக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால், தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாகவே தாம் வீதிக்கிறங்கி, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், ஒரு மாதத்திற்கு மேல் அதனை எவ்வாறு சமாளிக்க முடியும் என்று மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நிர்கதிக்குள்ளாகியுள்ள இந்த தருணத்தில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இதுகுறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமது வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.