May 2, 2025 17:37:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் 200 ஊடகவியலாளர்களை கைதுசெய்யத் திட்டம்’

அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் 200 ஊடகவியலாளர்களைக் கைது செய்யும் திட்டம் இலங்கைப் பொலிஸாரிடம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சபையில் தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது:-

ராஜபக்‌ஷ அரசு ஊடகவியலாளர்களை இலக்கு வைக்கின்றது. அதற்கமைய தம்மை விமர்சிப்பவர்களின் பட்டியலொன்றைப் பொலிஸாரிடம் அரசு வழங்கியுள்ளது. அவர்களைக் கைதுசெய்வதற்கான உத்தரவையும் அரசு வழங்கியுள்ளது. இந்தத் தகவல் எனக்கு கிடைத்துள்ளது.

இளம் தலைவராக இருந்தவேளை மகிந்த ராஜபக்‌ஷ, மனித உரிமைகளுக்காகப் போராடி ஜெனீவா வரை சென்றவர். இதன் காரணமாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு அதற்கு எதிரான வழியில் பயணிப்பது நல்லதல்ல.

அவ்வாறான அரசொன்றை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது கடந்த காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முழு உலகமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்சாலைகளும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இவை மிகவும் நெருக்கடியான தருணங்கள். அனைவரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் தமது பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு அரசு உதவ வேண்டும்.எனினும் வரவு – செலவுத் திட்டத்தில் இதனைக் காணமுடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.