மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படக் கூடாது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிப் பேராணை மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் விதிகளையோ காரணம் காண்பித்து மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என்று தெரிவித்து வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிடுமாறு கோரி சமர்பிக்கப்பட்ட மனுக்களே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்பதால்,அது மாகாணத்திற்குரிய விடயமாக கருத முடியாது என்றும், இதை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் அறிவித்து, யாழ். மேல் நீதிமன்றத்தின் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.
மேலும், மனுதாரர்கள் தங்களுடைய உறவினர்களைத் தனிப்பட்ட முறையில் நினைவு கூருவதை தடுக்க முடியாது. ஆனால், கூட்டாகச் சேர்ந்து மாவீரர் தினம் என்ற போர்வையில் செய்வது தேசிய பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை – கம்பர்மலையைச் சேர்ந்த சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் அல்வாயைச் சேர்ந்த வேலும்மயிலும் ஆகியோரால் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக குறித்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய, இந்த விடயம் இன்று காலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், கே.சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
எதிர் மனுதாரர்கள் சார்பாக, சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
எதிர் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், மாகாண மேல் நீதிமன்றுக்கு இந்த வழக்கை நடத்துவதற்கு நியாயாதிக்கம் இல்லை என ஆட்சேபனை தெரிவித்துடன் மாகாண சபை நிரலில் இல்லாத மனுக்கள் இவை என்றும், இந்த மனுக்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், ஊறு விளைவிப்பதாகவும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும், கட்டளை வழங்கப்பட்டால், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும்,மத்திய அரச சட்டத்தின் கீழும் இந்த மனுதாரர்கள் குற்றங்களைப் புரிவார்கள் எனவும் நீதிமன்றில் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்ந்த நீதிபதி அந்த மனுக்களை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதேவேளை, இந்த வழக்கைப் பார்வையிடுவதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபரும், சட்டத்தரணியுமான அஜித் ரோகண நீதிமன்றத்திற்கு வருகைதந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.