July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மக்கள் ஆணையுடன் தான் ஜெனிவா தீர்மானத்தில் இருந்து வெளியேறினோம்” : வாசுதேவ நாணயக்கார

Photo: Facebook/ Vasudeva Nanayakkara

மக்கள் ஆணையுடனேயே அமெரிக்காவின் தீர்மானத்திலிருந்து வெளியேறியதாகவும், நாட்டில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை கடைபிடிப்போம் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் நீர் வளங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன எமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் எமது இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டாம் என கூறுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதிகளால் தான் ரூபாவின் பெறுமதி மோசமான விதத்தில் வீழ்ச்சி கண்டதுடன் வட்டி வீதமும் அதிகரித்ததுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்விகளுக்கு எமது மக்கள் கடந்த தேர்தலில் மக்கள் ஆணையுடன் நாம் இதற்கான பதிலை கூறியுள்ளதாகவும், இதே ஆணையுடன் தான் அமெரிக்கா கொண்டுவந்த ஜெனீவா தீர்மானத்தில் இருந்து வெளியேறினோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, எமக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த நாட்டின் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும், நாட்டின் நீதியையும் கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்பதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துகொள்வதாகவும் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.