October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார விதிமுறைகள் பேணப்படுகின்றதா? : நிறுவனங்களில் பொலிஸார் சோதனை

நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் உரிய சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதை அவதானிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்காக சிவில் உடையில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் 24 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிக்கின்றார்களா? என்பதை கண்டறிவதற்காக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்றனவா என்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், நிறுவனம் அல்லது அலுவலகத்திற்கு முன்னால் கைகளை கழுவுதற்கான வசதிகள் ஏற்பாடு, வருகைத்தரும் நபர்களின் உடல் வெப்ப நிலையை கண்டறிவதற்கான வசதிகள், வருகைத்தரும் நபர்கள் தொடர்பான விபரங்களை பதிவுச் செய்வதற்கான நடவடிக்கை ஆகிய  மூன்று பிரதான விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இலங்கையில் எந்த பிரதேசங்களில் இருந்தாலும் தொடர்ந்தும் மேலே கூறிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.

அதன்படி, நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தொழில் வழங்கும் நிறுவனங்களிடம் இந்த சுகாதார வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.