ஆட்சியாளர்களின் தேவைகள் நிறைவேறிவிட்டதால், மக்கள் மீதான அக்கறை அவர்களிடத்தில் இல்லாமல் போய்விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் அரசாங்கத்தினால் மக்கள் முன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயங்கள் எதனையும் வரவு – செலவுத் திட்டத்தில் காண முடியவில்லையெனவும், இதன்படி மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்ற நோக்கம் ஆட்சியாளர்களிடம் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை, 20 ஆவது திருத்தம் ஊடான அதிகாரங்கள் உள்ளிட்ட தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொண்ட பின்னர் மக்கள் இருந்தாலும் ஒன்றே, இல்லாவிட்டாலும் ஒன்றே என்ற எண்ணத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை வரவு – செலவு திட்டத்தில் கொரோனவை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வதற்காக உலக நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கையில், இலங்கை அரசாங்கம் அதனை கொள்வனவு செய்ய முயற்சிக்காது இருப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தநிலைமையில், அரசாங்கம் கொரோனாவை பயன்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபட முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.