November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேலியகொடை – மெனிங் சந்தை கட்டடத் தொகுதி திறப்பு

பேலியகொடை – மெனிங் வர்த்தக சந்தை கட்டடத் தொகுதி பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் இன்று  திறந்து வைக்கப்பட்டது.

1192 விற்பனை நிலையங்களை உள்ளடக்கியதாகவும், ஒரே நேரத்தில் 600 வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகன தரிப்பிடத்தை கொண்டதாகவும் இந்த சந்தைத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பணியாளர்களுக்கான ஓய்வு அறைகள், மருத்துவ வசதிகள், வங்கி, உணவகம், அதிஉயர் குளிர் களஞ்சியசாலை உள்ளிட்ட வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரில் ஏற்படும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வாகவே, மொத்த மீன் விற்பனை மற்றும் மொத்த மரக்கறி விற்பனை நிலையங்கள் பேலியகொடைக்கு மாற்றப்பட்டுள்ளன.

பேலியகொடவுடன் அதிவேக நெடுஞ்சாலை தொடர்புப்பட்டுள்ளமை காரணமாக கொழும்பின் புற நகர் பகுதிகளுக்கு மொத்த விற்பனையை மேற்கொள்ளவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

பேலியகொடை – மெனிங் வர்த்தக சந்தை கட்டட தொகுதியின் நிர்மாண பணிகளுக்காக 6.9 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

புறக்கோட்டையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் வரையறுக்கப்பட்டிருந்த மெனிங் சந்தையானது தற்போது பேலியகொடவில் 13.5 ஏக்கர் விசாலமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.