கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதேவேளை இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலில் இருந்து வீசப்பட்ட கற்கள் பட்டதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேற்று காலை ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதன்போது, கச்ச தீவு பகுதியில் 20 க்கும் மேற்பட்ட இலங்கை ரோந்துக்கப்பல்கள் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டதால் மீனவர்கள் அச்சத்தால் மீன்பிடிக்க முடியாமல் அவதியுற்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கும் கச்சதீவுக்கும் இடையே மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி படகை நிறுத்தச் சொல்லி 50 க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடிவலைகளை கடலில் கொட்டி விட்டு இப்பகுதியில் நின்றால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்து விரட்டியடித்ததாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசை படகுகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.