November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பிரச்சனைகளை கண்டு ஓடி ஒளியும் பழக்கம் எனக்கில்லை” : ஜனாதிபதி

”நான் எந்தச் சவாலுக்கும் பயந்தவனும் அல்ல, பிரச்சினைகளை கண்டு ஓடி ஒளிந்துகொள்பவனும் அல்ல” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதையொட்டி இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே கோட்டாபய ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தன்னை ஜனாதிபதியாக்க வாக்களித்த 69 இலட்சம் பேரில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்களே என்பதனை நினைவு கூர்ந்து தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி, தான் இன, மத பேதமின்றி சகல பிரஜைகளினதும் உரிமைகளை பாதுகாக்கும் நிர்வாகத்தையே கொண்டு செல்வேன் என்று குறிப்பிட்டார்.

கடந்த ஒருவருட காலத்தில் சிறப்பான நிர்வாகத்தை தான் முன்னெடுத்தேன் என்பதற்கு கடந்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்பதற்காக மக்கள் வழங்கிய ஆணை சாட்சியாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

தமது ஆட்சியில் நீதித்துறையிலோ, அரச நிறுவனங்களிலோ தலையிட்டது கிடையாது எனவும், அந்த நிறுவனங்களுக்கான அதிகாரிகளின் நியமனங்கள் அரசியல் தலையீடுகள் இன்றியே இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எப்போதும் தனது எதிர்பார்ப்பாக நட்புகளை விடவும் திறமைகளுக்கும், தனிப்பட்ட தேவையின்றி பொதுத் தேவைகளுக்கும், வாய்ப் பேச்சுக்கு பதிலாக செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதாகவே இருக்கின்றது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை தனக்கு முன்னால் சவால்கள் பல உள்ளதாகவும், இதற்கு முன்னர் சவால்களை வெற்றிக்கொண்டவன் என்றபடியால் அவற்றுக்கு அஞ்சாது முகம்கொடுப்போன் எனவும், எந்தக் கட்டத்திலும் பிரச்சினைகளை கண்டு ஓடி ஒளிய மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.