January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதிகளுக்கு கொரோனா: இலங்கையின் இன்றைய நிலவரம்

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 243 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 18,645 ஆக அதிகரித்துள்ளது.

316 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 316 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,903 ஆக அதிகரித்துள்ளது.

சிறையில் இருந்த தப்பிக்க முயன்ற கைதிகளுக்கு தொற்று உறுதி

போகம்பறை பழைய சிறைச்சாலையிலிருந்து நேற்று  தப்பிக்க முயற்சித்த போது அதிகாரிகளினால் பிடிக்கப்பட்ட கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மரணமடைந்த கைதிக்கும் மற்றும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சிறையிலிருந்து தப்பி வெளியில் ஓடி, மத்திய மாகாண கல்வித் திணைக்கள வளாகத்தில் பதுங்கியிருந்து நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், அவரது அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்று கண்டிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போகம்பறை பழைய சிறைச்சாலையில் 167 கைதிகள், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல்லேகலை பொலிஸ் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட 10 பொலிஸ் அதிகாரிகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் துரித ஆன்டிஜன் கருவிகள்

கொரோனா கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம் துரித ஆன்டிஜன் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

உலக சுகாதார தாபனத்தின் இலங்கை பிராந்தியம் மற்றும் தென் கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகம் ஆகியன இணைந்து இவற்றை வழங்கியுள்ளன.

எதிர்வரும் வாரங்களில் மேலும் ஒரு இலட்சம் துரித ஆன்டிஜன் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெக்டன் டிக்கின்சன் நிறுவனம் புதிய ஆன்டிஜன் பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 10-30 நிமிடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற முடிவைத் தெரிந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்த பரிசோதனை கருவியை எளிதில் எங்கு வேண்டுமென்றாலும் கொண்டு செல்லலாம் என்றும் இதற்காகப் பரிசோதனை கூடம் எதுவும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறவில்லை விசாரணையில் தகவல்

இரண்டாவது கொரோனா அலை உருவான மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையை நடத்திச் செல்லும் பிரென்டிக்ஸ் நிறுவனமானது தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறவில்லை என்று, இதுவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரென்டிக்ஸ் கொரோனா கொத்தணியின் பொலிஸ் விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவால், சட்டமா அதிபர் தப்பல டீ லிவேராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான இடைக்கால அறிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவினர் கையளித்துள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா 2ஆவது அலையானது, ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்றிலிருந்து பரவியிருப்பதாக பிரன்டிக்ஸ் கொத்தணி தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.