November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணம் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் பாடசாலைகள் அடுத்த வாரத்தில் ஆரம்பம்

photo: Jaffna Hindu College/facebook

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் மற்றைய பிரதேசங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் கல்வி அமைச்சுகளை மீளத் திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி 23 ஆம் திகதி முதல் தரம் 6 தொடக்கம் 13 வகுப்பு வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம்  நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தரம் 1 முதல் 5 வரையான வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லையெனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்தை தொடர்ந்து கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகளை கடந்த 9 ஆம் திகதி திறக்க திட்டமிட்டிருந்த போதும், நாட்டில் தொடர்ந்தும் நிலவும் கொரோனா தொற்று நிலைமையால் மேலும் 2 வாரங்களுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் சுகாதார அதிகாரிகளிடம் கல்வியமைச்சு பரிந்துரைகளை கோரியிருந்தது.

இதனையடுத்து, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாடசாலைகளை திறப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று அறிவித்தார்.

இதேவேளை ஜனவரி மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை அந்த திகதியில் ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக எதிர்வரும் 2 வாரங்களில் முடிவு செய்யவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் சாதாரண தர வகுப்புகளை ஆரம்பிக்க முடியாது போனால் அந்தப் பரீட்சையை நடத்தும் தினத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.