July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை விதிமுறைகளை மீறுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

இலங்கையினால் தொடர்ச்சியாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரொமேனியா தூதரகங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இறக்குமதி தடைகளை விதிப்பதன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றானது தொடர்ந்து பல சவால்களைக் கொண்டுவரும் என்பதால், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பில் உள்ள தூதுவர்கள், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட இலங்கை அரசாங்க தரப்பினருடன்  கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 1 பில்லியன் யூரோ மானியம் இலங்கைக்கு வழங்கப்பட்டமை உள்ளிட்ட நீண்ட கால இருதரப்பு உறவு தொடர்பாகவும் அந்த அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்த்தகம் என்பது ஒரே திசையை நோக்கி பயணிப்பது அல்லவென்றும் தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாட்டால், இலங்கை மற்றும் ஐரோப்பாவின் வர்த்தக நடவடிக்கை மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த இறக்குமதி கட்டுபாடானது, இலங்கை பிராந்திய பொருளாதார மையமாக மாறுவதற்கு தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஒன்றியம், தொடர்ச்சியாக விதிக்கப்படும் இறக்குமதி கட்டுப்பாடு உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளது.