July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்பிஎல் போட்டிகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலுக்கு அர்ஜுன கடிதம்

இலங்கையில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கன் பிரீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக பல கேள்விகளை முன்வைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு முன்னாள் அணித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க கடிதம் அனுப்பியுள்ளார்.

எல்பிஎல் போட்டிகளின் பணிப்பாளர் இலங்கையில் நடைபெற்ற தேசிய முதல்தர போட்டிகளின்  போது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு உடையவர் எனவும், அது குறித்து கவனம் செலுத்துமாறும் அர்ஜுன ரணதுங்க தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் இணையத்தளமூடாக அணிகளை விற்பனை செய்வது தொடர்பில் வர்த்தகர்களுடன் தகவல்களை பரிமாற்றிக்கொள்கிறார்கள்.

அவர்களுக்கு அணிகளை வாங்கும் உரிமையாளர்கள் பற்றி பூரண தெளிவு உண்டா? எனவும் அர்ஜுன அந்தக் கடிதத்தில் வினவியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் நடத்தும் ஊழல் மோசடி ஆட்ட நிர்ணயம் உள்ளிட்ட 43 விசாரணைகளில் 23 இலங்கைக்கு எதிரானவை எனவும் அது, ஊழல் மோசடி விவகாரத்தில் இலங்கை மிக மோசமானது என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் கடந்த காலத்தில் கூறியதையும் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

வீரர்கள் யாருடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடனா அல்லது அணி உரிமையாளர்களுடனா?

எல்பிஎல் போட்டிகளின் போது ஐ.சி.சி நேரடியாக தலையிட்டு கண்காணிக்கும் உரிமை உள்ளதா?

போட்டிகளின் நிர்வாகத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளதா?

போன்ற கேள்விகளை முன்வைத்துள்ள அர்ஜுன ரணதுங்க, இந்தப் போட்டிகள் ஆட்ட நிர்ணயம் உள்ளிட்ட மோசடிகளுக்கு வித்திடாமல் இருக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.