November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகக்கிண்ண கால்பந்து தகுதிசுற்று: பிரேஸில் “ஹெட்ரிக்” வெற்றி

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடருக்கான அணியை தெரிவுசெய்யும் தகுதிகாண் சுற்றில் வெனிசுலாவுக்கு எதிரான போட்டியில் 1-0 என பிரேஸில் வெற்றிபெற்றது.

உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.

சாவோபாலோவில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது. இப்போட்டியின் முதல் பாதியில் நட்சத்திர வீரரான நெய்மார் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

போட்டியின் 7ஆவது நிமிடத்தில் பிரேஸிலின் ரிச்சர்லிஸன் போட்ட கோல் நடுவரால் “ஓப்சைட்” என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 40 ஆவது நிமிடத்தில் பிரேஸில் அணி வீரரான டக்லஸ் லூயிஸ் போட்ட கோலும் நடுவரால் “பவுல்” என அறிவிக்கப்பட்ட முதல் பாதி ஆட்டம் கோலின்றியே முடிந்தது.

இரண்டாம் பாதியில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய பிரேஸில் அணிக்கு 66 ஆவது நிமிடத்தில் ரொபர்டோ பேர்மினோ முதல் கோலை ஈட்டிக்கொடுத்தார்.

வெனிசுவேலா அணி அதன் பிறகு கோலடிக்க முயற்சித்த போதிலும் பலனளிக்கவில்லை. இறுதியில் 1-0 என பிரேஸில் வெற்றிபெற்றது.

ஐந்து தடவைகள் கால்பந்தாட்ட உலக சாம்பியனான பிரேஸிலுக்கு இது ஹெட்ரிக் வெற்றி என்பதுடன் வெனிசுலாவுக்கு மூன்றாவது தோல்வியாகும். புள்ளிகள் பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது.

இதேவேளை, முன்னாள் உலக சாம்பியனான உருகுவே ஒரு போட்டியில் கொலம்பியாவை 3-0 என வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றது.

மற்றுமொரு போட்டியில் பெருவை 2-0 எனும் கோல் கணக்கில் சிலி அணி வெற்றிகொண்டது. இந்த சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடருக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.