January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்பிஎல்: தம்புள்ளை அணியை வாங்கினார் பொலிவூட் நடிகர் சச்சின் ஜோஷி

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையை பொலிவூட் நடிகர் சச்சின் ஜோஷி வாங்கியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஐந்து அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே கண்டி டஸ்கர்ஸ் அணியை பொலிவூட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் சொஹைல் கான் ஆகியோர் வாங்கியிருந்த நிலையில், தம்புள்ளை அணியை சச்சின் ஜோஷி வாங்கியுள்ள தகவலை மும்பை மிரர் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

சச்சின் ஜோஷி தரப்பில் இந்தத் தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் ஜோஷியுடனான ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் அவர் உரிமையை பெற்றுக்கொண்டதாகவும் லங்கா பிரீமியர் லீக்கின் தகவல்களை மும்பை மிரர் மேற்கோள் காட்டியுள்ளது.

‘தம்புள்ளை லயன்ஸ்’ என்று முன்னர் இருந்த அணியின் பெயர் இப்போது ‘தம்புள்ளை வைக்கிங்’ என்று மாற்றப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தசுன் சானக நியமிக்கப்பட்டுள்ளார். கார்லோஸ் பரத்வைட் மற்றும் சமித் பட்டேல் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கையில் கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் 5 அணிகள் பங்கேற்கும் இந்தக் கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.