November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய – ஆஸி. தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி

கொரோனாவிலிருந்து மெதுவாக மீண்டெழுந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் உலகம் தனது அடுத்தக்கட்ட முயற்சியாக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.இந்தத் தொடரில் குறிப்பிட்ட சிலருக்கு மைதானத்துக்கு சென்று போட்டியை கண்டுகளிக்க அனுமதி கிடைத்திருந்தது.

அதனை தொடர்ந்து இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் போட்டியை மைதானத்திலிருந்து நேரில் கண்டுகளிக்கும் வாய்ப்பை ரசிகர்களுக்கு அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 2021 ஜனவரி 19 ஆம் திகதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 3 சர்வதேச இருபது 20, 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் ஆட்டங்கள் என்பன உள்ளடங்கியுள்ளன.

இருபது20, சர்வதேச ஒருநாள் தொடர்களின் போது மைதானத்தின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக 50 வீதமான ரசிகர்களுக்கும், டெஸ்ட் தொடரின் போது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஏற்றவாறு 25 முதல் 75 வீதமான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிரசித்திபெற்ற நத்தார் பண்டிகைக்கு மறுநாள் ஆரம்பமாகும் பொக்ஸிங் டே ஆட்டமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதும் சிறப்பம்சமாகும்.