January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐபிஎல் 2020: ஐந்தாவது தடவையாக சாம்பியன் ஆனது மும்பை!

BCCI / IPL

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதி ஆட்டத்தில் டெல்லி கெபிடெல்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி ஐந்தாவது தடவையாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை மும்பை அணி வீரர்களின் ஆதிக்கமே மேலோங்கிக் காணப்பட்டது. இதனால் இறுதி ஆட்டத்துக்குரிய சுவாரஷ்யமும் விறுவிறுப்பும் அற்றுப் போயிருந்தது.

முதலில் துடுப்பெடுத்த டெல்லி கெபிடெல்ஸ் முதல் பந்திலேயே மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை பறிகொடுத்தது. தொடர்ந்து அஜின்கெயா ரஹானே, ஷிகர் தவான் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் களத்தைவிட்டு வெளியேற டெல்லி அணி 3 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனாலும், அடுத்து இணைந்த அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பாண்ட் அணி சிறப்பாக ஆடி 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தது. ரிஷப் பாண்ட் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டெல்லி அணி மீண்டும் சிரமத்துக்குள்ளானது. ஆனாலும், ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 65 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலைக்கு உயர்த்தினார்.

157 இலக்கு

டெல்லி கெபிடெல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் ட்ரென்ட் பௌல்ட் 3 விக்கெட்டுகளையும், கோல்டர் நைல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

BCCI / IPL

வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 157 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குவின்டன் டி கொக், அணித் தலைவர் ரோஹித் சர்மா ஜோடி 4 ஓவர்களில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

குவின்டன் டி கொக் 20 ஓட்டங்களுடன் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 19 ஓட்டங்களுடன் ரன்அவுட் ஆனார். ஆயினும், மும்பை அணிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் அபாரமாக துடுப்பாடிய ரோஹித் சர்மா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

தனது 200 ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா, 4 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 68 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை இலகுவாக்கினார்.

கிரான் பொலார்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் மும்பை அணி வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்படவில்லை.

இஷான் கிஷான் 19 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பௌண்டரிகளுடன் 33 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.

இதற்கு முன்னர் 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் ஐ.பி.எல் தொடர்களை வென்ற மும்பை அணியின் ஐந்தாவது சாம்பியன் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய இறுதி ஆட்டத்தின் சிறந்த வீரராக ட்ரென்ட் பௌல்டும், இம்முறை தொடரின் சிறந்த வீரராக ஜொப்ரா ஆச்சரும் தெரிவாகினர்.