January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இம்முறை ஐபிஎல் கிண்ணம் யாருக்கு?: டெல்லி – மும்பை பலப்பரீட்சை!

pic: BCCI/IPL

ஒன்றரை மாத காலத்துக்கும் மேலாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்துவந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான சம்பியனை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெபிடெல்ஸ் அணிகள் (செவ்வாய்க்கிழமை)மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ்

2013, 2015, 2017, 2019 ஆகிய நான்கு ஆண்டுகள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை ஐந்தாவது முறையாக சம்பியனாகும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றில் 9 ஆட்டங்களிலும் அதன் பிறகு பிளே ஒப் சுற்றிலும் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்தை உறுதிசெய்தது.

குயின்டன் டி கொக், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் இத்தொடரில் 450 ஓட்டங்களுக்கு மேல் குவித்து துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

pic: Mumbai Indians

ரோஹித் சர்மா, கிரான் பொலார்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தொடரில் 250 ஓட்டங்களுக்கு மேல் பெற்று திறமையை நிரூபித்துள்ளனர். அவர்களின் துடுப்பாட்ட பலத்துடன் இறுதி ஆட்டத்தை மும்பை அணி எதிர்கொள்ள காத்திருக்கிறது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜஸ்பிரிட் பும்ரா 27 விக்கெட்டுகளையும், ட்ரென் பௌல்ட் 22 விக்கெட்டுகளையும் தொடரில் கைப்பற்றியுள்ளனர்.

டெல்லி கெபிடெல்ஸ்

மறுபக்கம் இளம் வீரர்கள் படையுடன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டெல்லி கெபிடெல்ஸ் அணி களமிறங்குகின்றது. டெல்லி அணி லீக் சுற்றில் 8 வெற்றிகளைப் பெற்றதுடன் பிளே ஒப் சுற்றில் முதல் போட்டியில் மும்பையிடம் தோல்வியடைந்தது. எனினும், எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசஸ் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.

pic: Delhi Capitals

ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிவந்த டெல்லி அணியிடம் சில சந்தர்ப்பங்களில் தடுமாற்றம் தெரிந்தது. இதனால் டெல்லி அணி வீரர்கள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதை உறுதியாகக் கணிக்க முடியாது.

தொடரில் 600 ஓட்டங்களைக் குவித்த வீரராக ஷிகர் தவானும், 454 ஓட்டங்களைப் பெற்று அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயரும் நம்பிக்கைக்குரிய வீரர்களாக அணியில் உள்ளனர்.

சகலதுறை வீரரான மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் துடுப்பாட்டத்தில் 352 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் எத்தகைய திறமை வாய்ந்த வீரரையும் வீழ்த்தும் வல்லமை படைத்தவராக ககிசோ ரபாடா திகழ்கிறார். அவர் இத்தொடரில் 29 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிசிறந்த பந்து வீச்சாளராகவுள்ளார்.

இவ்வாறாக இரண்டு அணிகளிலும் ஆற்றல்மிக்க வீரர்கள் பலர் இருப்பதால் இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

நேருக்கு நேர்

ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் மும்பை 15 வெற்றிகளையும், டெல்லி 12 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

இம்முறை மோதிய டெல்லியுடன் மோதிய மூன்று ஆட்டங்களிலும் மும்பை அணியே வெற்றியீட்டியது. அந்தத் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி இந்த இறுதிப் போட்டியில் முயற்சிக்கலாம்.

2011 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரோஹித் சர்மா இன்று 200 ஆவது ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல்லில் 200 ஆட்டங்களில் விளையாடிய வீரராக ரோஹித் சர்மா பதிவாகவுள்ளார். அவர் இதுவரை 5162 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இந்த சாதனையை ஏற்கனவே சென்னை அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி படைத்துவிட்டார். அவர் 204 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.