January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகளிர் ஐ.பி.எல்.; ட்ரையல் பிளேஸர்ஸ் அணி சம்பியனானது

மகளிருக்கான இருபது 20 சவால் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ட்ரையல் பிளேஸர்ஸ் அணி முதல் தடவையாக சம்பியனாக மகுடம் சூடியது. இறுதி ஆட்டத்தில் ஹர்மன் பிரீத்கரின் சுப்பநோவாஸ் அணியை 16 ஓட்டங்களால் தோல்வியடைய செய்து இந்த மகுடத்தை ட்ரையல் பிளேஸர்ஸ் அணி சூடிக்கொண்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு இணையாக மூன்றாவது தடவையாக மகளிருக்கான இருபது 20 சவால் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரையல் பிளேஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்மிருதி மந்தனா 68 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

சுப்பர்நோவாஸ் அணிக்காக விளையாடிய ச்மரி அத்தபத்து இரண்டு பிடிகளை எடுத்ததுடன் பந்துவீச்சில் ராதா யாதவ் 5 விக்கெட்டுகளையும், இலங்கையின் சசிகலா சிறிவர்தன ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

119 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய சுப்பர் நோவாஸ் அணிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. ச்சமரி அத்தபத்து, சசிகலா சிறிவர்தன ஆகியோரால் பிரகாசிக்க முடியவில்லை. ஹர்மன் பிரீத்கர் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதி ஓவரில் 24 ஓட்டங்கள் தேவைப்பட்ட போதிலும் 7 ஓட்டங்களையே பெற்ற சுப்பர் நோவாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.