ஸ்பெய்னின் இளம் வீரரான கார்லோஸ் சோலர்(23) மூன்று பெனால்டி வாய்ப்புகளில் ஹெட்ரிக் கோலடிக்க ரியல் மெட்ரிட் கழக அணியை 4-1 எனும் கோல் வித்தியாசத்தில் வெலன்சியா கழக அணி வீழ்த்தியது.
ஸ்பெய்னின் லா லிகா கால்பந்தாட்டத் தொடரில் ரியல் மெட்ரிட் மற்றும் வெலன்சியா கழக அணிகள் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியில் சந்தித்தன.
போட்டி ஆக்ரோஷமாக ஆரம்பமான போதிலும் ரியல் மெட்ரிட் அணியே முதல் கோலைப் போட்டது.
கரிம் பென்ஸிமா 23 ஆவது நிமிடத்தில் ரியால் மெட்ரிட் அணிக்கு அந்த கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
அதன் பின்னர் 35 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியில் கார்லோஸ் சோலர் கோல் போட போட்டி சமநிலையடைந்தது.
இருந்த போதிலும் ரியல் மெட்ரிட் கழக அணி வீரரான ரபிஹெல் வார்னே 43 ஆவது நிமிடத்தில் இழைத்த தவறால் ஓன் கோல் பதிவாக முதல் பாதியில் 2-1 எனும் கோல் கணக்கில் வெலன்சியா கழக அணி முன்னிலைப் பெற்றது.
இரண்டாம் பாதியில் 54 மற்றும் 63 ஆவது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்புகளிலும் கார்லோஸ் சோலர் அபாரமாக கோல் போட்டார்.
இதனால் ரியல் மெட்ரிட் அணி வீரர்கள் நிலைகுழைந்து போனார்கள். ரியல் மெட்ரிட் அணியால் மேலதிகமாக கோலடிக்க முடியாது போக போட்டியில் 4-1 எனும் கோல் வித்தியாசத்தில் வெலன்சியா கழக அணி அபார வெற்றிபெற்றது.
லா லிகா கால்பந்தாட்ட வரலாற்றில் ஒரு போட்டியில் மூன்று பெனால்டிகளிலும் கோலடித்த மூன்றாவது வீரராகவும் கார்லோஸ் சோலர் பதிவானார்.
தொடரின் புள்ளிகள் பட்டியலில் வெலன்சியா கழக அணி 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 11 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாமிடத்திலுள்ளது.
ரியல் மெட்ரிட் அணி 8 போட்டிகளில் 5 வெற்றியைப் பெற்று 16 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் இருப்பதுடன் ரியல் சொஸியாட் அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 20 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை வகிக்கிறது.