January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சன்ரைசஸ் அணியை வீழ்த்தி முதற்தடவையாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது டெல்லி

பிளேவ் ஒப் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைசஸ் அணியை 17 ஓட்டங்களால் வென்ற டெல்லி அணி ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

அபுதாபியில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடெல்ஸ் அணிக்கு ஷிகர் தவான் மற்றும் மார்க்கஸ் ஸ்டெயாய்னிஸ் ஜோடி 8.2 ஓவர்களில் 86 ஓட்டங்கள் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது.

மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து ஷிகர் தவான் – ஷிம்ரோன் ஹெட்மயர் ஜோடி 27 பந்துகளில் அதிரடியாக 52 ஓட்டங்களைப் பகிர்ந்து சவால் விடுத்தது.

அரைச்சதமடித்த ஷிகர் தவான் 2 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 78 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கிய ஷிம்ரோன் ஹெட்மயர் 22 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

டெல்லி கெபிடெல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களைக் குவித்தது. இதன்போது சன்ரைசஸ் அணி வீரர்கள் களத்தடுப்பின் போது பல பிடிகளை தவறவிட்ட காரணத்தினால் அது கெபிடெல்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்தது.

கடின இலக்கான 190 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான நிலைக்கு தள்ளப்பட்டது. அணித்தலைவர் டேவிட் வோனர், பி.கார்க், மனிஷ் பாண்டே போன்ற வீரர்களால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை.

நம்பிக்கை அளிக்கும் விதமாக துடுப்பெடுத்தாடிய கேன் வில்லியம்ஸன் 4 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 67 ஓட்டங்களைப் பெற்றார். 16.5 ஓவரில் கேன் வில்லியம்ஸன் ஆட்டமிழக்கும் போது சன்ரைசஸ் அணி 16.5 ஓவர்களில் 167 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதன்படி சன்ரைசஸ் வெற்றிபெற 19 பந்துகளில் 43 ஓட்டங்களே அவசியமாக இருந்தது. என்றாலும் அவர்களால் மேலதிகமாக 25 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்படி சன்ரைசஸ் அணியின் துடுப்பாட்டம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர். கெபிடெல்ஸ் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்தை உறுதிசெய்தது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கெபிடெல்ஸ் அணி சந்திக்கவுள்ளது.