January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறுதி போட்டியில் மும்பையை சந்திக்கப்போகும் அணி எது?; டெல்லி-சன்ரைசஸ் இன்று மோதல்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்துக்கான இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும் பிளே ஒப் சுற்றின் மற்றுமொரு சவாலில் டெல்லி கெபிடெல்ஸ் அணி சன்ரைசஸ் அணியை இன்று சந்திக்கவுள்ளது.

டெல்லி அணியைப் பொறுத்தவரை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதற்கான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஏற்கனவே முதலாவது ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வியடைந்த நிலையில், இன்று அவர்கள் சன்ரைசஸை சந்திக்கிறார்கள்.

டெல்லி அணி முழுக்க முழுக்க இளம் கூட்டணியைக் கொண்டது என்பதுடன், முதல் ஆட்டத்தில் விட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு விளையாட முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். டெல்லி அணி தொடரின் ஆரம்பத்தில் 9 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்று எதிரணிகளை மிரட்டியது.

ஆனாலும், அதன் பின்னர் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் டெல்லி அணி பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறுவதே சந்தேகத்திற்கிடமானது. என்றாலும் அதன் பின்பு ஒருவாறாக வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்து பிளேவ் ஒப் சுற்றுக்கான தகுதியைப் பெற்றுக்கொண்டது.

அந்த வகையில் மும்பையிடம் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் இன்று டெல்லிக்கு இரண்டாவது வாய்ப்பு கிட்டியுள்ளது. இதில் வெற்றிபெற்றால் ஐ.பி.எல் வரலாற்றில் முதல் தடவையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெரும் வாய்ப்பை டெல்லி பெறும்.

ஷிகர் தவான், பிருத்திவ் ஷா, அஜின்கெயா ரஹானே ஆகியோர் கடைசியாக நடைபெற்ற ஆட்டங்களில் சரியாக பிரகாசித்திருக்கவில்லை. ககிஸோ ரபாடாவின் அபார பந்துவீச்சு டெல்லி அணிக்கு பெரும் உந்துசக்தியாக உள்ளது. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அனுபவ சுழல்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸார் பட்டேல் ஆகியோர் ஆற்றலை வெளிப்படுத்தினால் டெல்லி அணியால் சிறந்த சவாலை விடுக்க முடியும்.

மறுபக்கம் அனுபவ வீரர்களைக் கொண்ட அணியாக சன்ரைசஸ் ஹைதராபாத் அணி களமிறங்குகின்றது. இந்த அணியில் இரண்டு சர்வதேச அணிகளின் தலைவர்கள் இடம்பெற்றுள்ளமை பெரும் பலமாகும்.

நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் ஆகியோரே அந்த இருவருமாவர். அணியின் தேவைக்கேற்ப ஆடும் திறமையும், அனுபவமும் இவர்களுக்கு இருக்கிறது.

அணித்தலைவர் டேவிட் வோனரும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்படுவதால் சன்ரைசஸ் அணியால் வெற்றி எதிர்பார்ப்பு வைக்க முடியும். இவர்களின் ஆற்றலே எலிமினேட்டர் சுற்றில் பெங்களுர் அணியை தோற்கடிக்க பிரதான காரணமானது.

வேகப்பந்து வீச்சில் நடராஜன் அசத்துகின்றார். உலகத் தரம் வாய்ந்த சுழல்பந்துவீச்சாளராக உயர்ந்துள்ள ரஷித் கான், சந்தீப் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளமை சன்ரைசஸ் அணியை மேலும் வலிமையாக்குகின்றது.

ஐ.பி.எல் வரலாற்றில் டெல்லியும், ஹைதராபாத்தும் 17 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் 11 வெற்றிகளையும், டெல்லி 6 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், இந்தமுறை லீக் சுற்றில் இரண்டு ஆட்டங்களிலுமே டெல்லி அணி தோல்வியடைந்தது. இந்தத் தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை டெல்லி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.