January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெங்களுரை வீழ்த்தியது சன்ரைசஸ்

(photo:BCCI/IPL)

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் எலிமினேற்றர் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி கெபிடெல்ஸ் அணியுடன் மோதும் வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி ஆரம்பத்திலேயே பின்னடைவுக்குள்ளானது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அணித்தலைவர் விராத் கோஹ்லி 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தெவ்தத் படிக்கால் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழக்க பெங்களுர் அணி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு வந்த வீரர்களால் பெரிதாகப் பிரகாசிக்க முடியவில்லை. பெங்களுர் அணி மந்த கதியிலேயே ஓட்டங்களைப் பெற்றது.

ஏரோன் பிஞ்ச் 32 ஓட்டங்களையும், ஏபி டிவிலியர்ஸ் 56 ஓட்டங்களையும் பெற்று பெங்களுர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஓரளவுக்கு உயர்த்த, பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலகுவான இலக்கான 132 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வழமைக்கு மாறாக விக்கெட்டுகளை இழந்து சிரமத்துக்குள்ளானது. முதல் ஓவரில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அணித்தலைவர் டேவிட் வோனர் 17 ஓட்டங்களுடனும், மனிஸ் பாண்டே 24 ஓட்டங்களையும் பெற்றனர். சன்ரைசஸ் அணி 11.5 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடையும் நிலைக்கு தள்ளப்பட்டது.

பெங்களுர் பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீச சன்ரைசஸ் அணி வீரர்கள் ஓட்டங்களைப் பெற முடியாமல் திணறினர்.
என்றாலும், சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய கேன் வில்லியம்ஸன் அரைச்சதமடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டார். கேன் வில்லியம்ஸன் 50 ஓட்டங்களையும், ஜேஸன் ஹோல்டர் 24 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை எட்ட உதவினர்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றது.ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிளே ஓவ் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கெபிடெல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்கள்.

அந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்தாடும் தகுதியைப் பெற்றுக்கொள்ளும்.