July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய லீக் கால்பந்து: சாதனை படைத்தார் ஹெரி கேன்

ஐரோப்பிய லீக் கால்பந்து: சாதனை படைத்தார் ஹெரி கேன்
(Photo: Harry Kane/ Facebook)

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவரான ஹெரி கேன் புதிய மைல்கல் சாதனை ஒன்றை எட்டியுள்ளார். ஓர் அணி சார்பாக 200 கோல்களை அடித்த வீரர் என்பதே அது.

ஐரோப்பிய லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் லுடோகொரெட்ஸ் கழக அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த இலக்கை அடைந்தார். போட்டியில் 13 ஆவது நிமிடத்தில் ஹெரி கேன் கோலடித்தார்.

இது டொட்டன்ஹாம் அணி சார்பாக அவர் போட்ட 200 ஆவது கோலாகும். 7 ஆண்டுகளாக டொட்டன்ஹாம் அணிக்காக விளையாடி வரும் ஹெரி கேன் தனது 300 ஆவது போட்டியில் இந்த மைல் கல் சாதனையை அடைந்தார்.

சொந்த மைதானத்தில் 100 கோல்களைப் பூர்த்திசெய்துள்ள 27 வயதுடைய ஹெரி கேன் இந்தப் பருவ காலத்தில் 13 போட்டிகளில் 22 கோல்களை அடித்துள்ளார்.

ஓர் அணி சார்பாக அதிக கோல்களைப் போட்ட வீரர்களின் வரிசையில் முன்னாள் ஜாம்பவான் ஜிம்மி கிரேவ்ஸ் திகழ்கிறார்.  இவர்  381 போட்டிகளில் 266 கோல்களை அடித்துள்ளார்.

லுடோகொரெட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பாதியில் 2-0 என முன்னிலைப் பெற்ற டொட்டன்ஹாம் அணி 3-1 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.