October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சன்ரைசஸுக்கு சவாலாக விளங்குமா பெங்களுர்?; இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை

(photo:BCCI/IPL)

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் எலிமினேடர் சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டேவிட் வோனர் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, விராத் கோஹ்லியின் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.

இந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பதுடன், வெற்றிபெறும் அணி மற்றொரு எலிமினேடர் போட்டியில் டெல்லி அணியுடன் நாளை மோதவுள்ளது.

இவ்விரண்டு அணிகளைப் பொறுத்தவரை பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி கடைசியாக விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. பிளே ஒப் சுற்றுக்கு முன்னேற தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த பெங்களுர் அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்துவந்த பெருமை மும்பை அணியையே சாரும்.

அவர்கள் 9 போட்டிகளில் வெற்றிபெற்றதால் கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற அணிகளின் வாய்ப்பு பறிபோக பெங்களுர் அணியால் பிளே ஒப் சுற்றுக்குள் நுழைய முடிந்தது.
எனினும், இதற்கு அப்பால் செல்வதற்கு பெங்களுர் அணி இன்று கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும்.

பெங்களுர் அணியில் தலைவர் விராத் கோஹ்லி, ஏபி டிவிலியர்ஸ், தெவ்தத் படிக்கால் ஆகியோர் துடுப்பாட்டத்துக்கு பலம் சேர்க்கின்றனர். ஆனால், இவர்களுக்கு ஏனைய வீரர்களால் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. வொஸிங்டன் சுந்தர், ஸிவம் துபே ஆகிய இளம் துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் அவர்கள் இதுவரை திறமையை வெளிப்படுத்தவில்லை.

அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி காயத்திலிருந்து மீண்டு வந்தால் அணி மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. பெங்களுர் அணி இந்த வீரர்களின் ஆற்றல்களைக் கொண்டு பலம் வாய்ந்த சன்ரைசஸுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.

சன்ரைசஸ் அணியைப் பொறுத்தமட்டில் தலைவர் டேவிட் வோனர் அபாரமாக துடுப்பெடுத்தாடி அணிக்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்கிறார். அவரது பலமே அணிக்கு தன்னம்பிக்கை அளிப்பதாகவுள்ளது.

மனிஸ் பாண்ட்டே, ஜொனி பெயார்ஸ்டோவ், கேன் வில்லியம்ஸன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளமையும், அவர்கள் கடந்த ஆட்டங்களில் திறமையை வெளிப்படுத்தியதும் வெற்றி மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பந்துவீச்சில் அசத்துவதற்கு உலகப் புகழ் பந்துவீச்சாளரான ரஸித் கான் எதிரணியின் துடுப்பாட்டத்தை பதம்பார்க்க காத்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் சிறப்பாக செயற்படும் பட்சத்தில் சன்ரைசஸ் அணி அடுத்த போட்டி மீது எதிர்பார்ப்பு வைக்க முடியும்.

பெங்களுர் மற்றம் ஹைதராபாத் அணிகள் இதுவரை 17 ஆட்டங்களில் மோதியுள்ளதுடன், அவற்றில் சன்ரைசஸ் 10 வெற்றிகளையும், பெங்களுர் 7 வெற்றிகளையும் பதிவுசெய்துள்ளன. இந்த வருட தொடரில் 2 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.