January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்

(photo:BCCI/IPL)

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியை 57 ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அணித்தலைவர் ரோஹித் சர்மா ஓட்டம் பெறாமலேயே ஆட்டமிழந்தார்.

என்றாலும் குவின்டன் டி கொக் 40 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 55 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்கள் குறைந்த பந்துகளில் ஓட்டங்களைக் குவித்திருந்தமை சிறப்பம்சமாகும். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 37 ஓட்டங்களை விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களைக் குவித்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இமாலய இலக்கான 201 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய டெல்லி கெபிடெல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. பிருத்திவ் ஷோ, அஜின்கெயா ரஹானே, ஷிகர் தவான் ஆகிய மூவரும் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர். டெல்லி அணி முதல் ஓட்டத்தைப் பெற முன்னதாக 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஆறுதல் அளிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடிய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 65 ஓட்டங்களையும், அக்ஸார் பட்டேல் 42 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களின் தயவால் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களைப் பெற்று கௌரவமான தோல்வியைத் தழுவியது.

ஜஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் பௌல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.