November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார் வாட்சன்!

(Photo: Shane watson/ Facebook)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான ஷேன் வாட்சன்  அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அபுதாபியில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, சென்னை அணி வீரர்களிடம் தனது ஓய்வு குறித்த முடிவை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வாட்சன், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப் போவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து வாட்சன் கூறுகையில், “ஐந்து வயதில் டெஸ்ட் போட்டியை பார்த்த போது, என் அம்மாவிடம் நான் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட வேண்டும் என்று கூறினேன். அப்போது அது என் கனவாக இருந்தது.

(Photo: BCCI/IPL)

தற்போது நான் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறேன்.

என்னுடைய கனவுகளுடன் வாழ்ந்ததால், நான் மிகப் பெரிய அதிர்ஷ்டக்காரன்தான்.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் ஓய்வு முடிவை எடுத்தேன். இப்போது ஓய்வுபெற சரியான நேரமாக உணர்கின்றேன்.

எனக்கு மிகவும் பிடித்த சென்னை அணிக்காக கடைசி போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி.

கடந்த 3 ஆண்டுகளாக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கினர்.

காயம் உள்ளிட்ட பின்னடைவுகளுக்கு பின்னர், 39 வயதில் எனது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ‛சகலதுறை ஆட்டக்காரர்’ ஷேன் வாட்சன் மொத்தமாக 59 டெஸ்ட் (3731 ரன், 75 விக்கெட்), 190 ஒருநாள் (5757 ரன், 168 விக்கெட்) மற்றும் 58 சர்வதேச ‛20-20′ (1462 ரன், 48 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளதோடு, 2016 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதன்பின் ‘பிக் பாஷ் லீக்’, பாகிஸ்தான் பிரிமியர் லீக், வங்காளதேச பிரிமியர் லீக், கரீபியன் பிரிமியர் லீக், ஐ.பி.எல், தொடர்களிலும் பங்கேற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் முறையே, ராஜஸ்தான் (2008-2015), பெங்களூர் (2016-2017), சென்னை (2018-2020)  ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

அவர் தற்போது எமிரேட்சில் நடைபெற்றுவரும் 13 ஆவது ஐபிஎல் தொடரில் 11 இன்னிங்சில் பங்கேற்று, 299 ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ஷேன் வாட்சன் ஓய்வை அறிவித்ததையடுத்து, அவருக்கு ரசிகர்கள், சக கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுகளையும் ஓய்வுக்குப் பின்னரான வாழ்க்கை நன்றாக அமையவும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.