October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறுதி போட்டிக்கு நுழையப்போவது யார்?; மும்பை – டெல்லி பலப்பரீட்சை

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் முதல் அணியை தெரிவுசெய்யும் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. பிளேவ் ஒப் சுற்றின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கெபிடெல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெறும்.

ஐ.பி.எல் வரலாற்றில் நான்கு தடவைகள் சாம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ளது. அணித்தலைவர் ரோஹித் சர்மா, குவின்டன் டி கொக், இஷான் கிஷான்,சூரியகுமார் யாதவ் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அணியை பலப்படுத்துகின்றனர்.

ஹர்திக் பாண்ட்யா, கிரான் பொலார்ட் ஆகியோர் தேவையான சந்தர்ப்பங்களில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளார்கள். இவர்களின் ஆட்டத்திறன் மூலமே லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 வெற்றிகளை ஈட்டி 18 புள்ளிகளைப் பெற்றது.

வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, ட்ரென் பௌல்ட் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி எதிரணி துடுப்பாட்டக்காரர்களை மடக்குகின்றனர். எனவே, இவர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் டெல்லி அணிக்கு ஏற்பட்டுள்ளது.

அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், கடைசி லீக் ஆட்டத்தில் பிரகாசித்த அஜின்கெயா ரஹானே ஆகியோர் டெல்லி அணியின் நம்பிக்கைக்குரிய வீரர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஏனைய வீரர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் டெல்லி அணி மும்பை அணிக்கு சவாலாக விளங்கும்.

குறிப்பாக பிருத்திவ் ஷா, ரிஷப் பாண்ட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ககிஸோ ராபாடா, அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், நொட்ஜி ஆகியோர் டெல்லி அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்துகின்றனர்.

மும்பை மற்றும் டெல்லி அணிகள் 26 ஆட்டங்களில் விளையாடியுள்ளதுடன், அவற்றில் மும்பை 14 வெற்றிகளையும், டெல்லி 12 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இந்தமுறை லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் மும்பையே வெற்றிபெற்றது. எனவே அந்தத் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லி அணி இன்று விளையாடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.