இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தெரிவுக் குழுவின் தலைவருமாக இருந்த சனத் ஜயசூரியவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்திருந்த 2 ஆண்டுகள் தடை முடிவுக்கு வந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் ஒழிப்பு குழுவின் பிரதிநிதிகள் சிலர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது சனத் ஜயசூரியவுக்கு தடைவிதிக்கப்பட்டது. அவர் தன்னுடைய தொலைபேசியில் இருந்த விடயங்களை மறைத்ததாகக் கூறியே அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
அந்தத் தடைக்கு அமைவாக கிரிக்கெட்டுடன் தொடர்புடைய எந்தவொரு செயற்பாட்டிலும் சனத் ஜயசூரிய ஈடுபட முடியாது என உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தடை முடிவுக்கு வந்துள்ளதுடன், ஐ.சி.சி அதனை சனத்துக்கு அறிவித்துள்ளது.
இதனை அவர் அறிக்கையின் மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தடை முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து கிரிக்கெட்டை விருத்தி செய்யும் பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட்டுக்காக விளையாடும் காலத்திலும் அதேபோன்று நிர்வாகியாக மாறிய பின்னரும் அர்ப்பணிப்புடன் தாம் செயற்பட்டதாகவும் அதனை இலங்கை ரசிகர்கள் நன்கறிவார்கள் என்றும் சனத் ஜயசூரிய தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.