October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மும்பையை வீழ்த்தி பிளே ஒப் சுற்றுக்குள் நுழைந்தது ஹைதராபாத்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் டேவிட் வோனர் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் மூன்றாவது அணியாக பிளே ஒப் சுற்றுக்குள் நுழைந்தது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசஸ் அணி பிளே ஒப் சுற்றை உறுதிசெய்தது.

சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி வழமைக்கு மாறாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சோபை இழந்தது. உபாதையிலிருந்து மீண்டுவந்த அணித்தலைவர் ரோஹித் சர்மா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குவின்டன் டி கொக் 25 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 36 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 33 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் 2 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட மும்பை அணி 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய கிரான் பொலார்ட் 25 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது.

சந்தீப் சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜேஸன் ஹோல்டர், எஸ்.நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கான 150 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசஸ் சார்பாக தலைவர் டேவிட் வோனரும் விருத்மன் ஷாவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இவர்கள் இருவரின் ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தில் மும்பை அணி வீரர்களின் பந்துவீச்சு நாலா பக்கமும் தெறித்தன. வேகப்பந்துவீச்சாளரான பும்ரா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டேவிட் வோனர் 58 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பௌண்டரிகளுடன் 85 ஓட்டங்களையும், விருத்மன் ஷா 58 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர். சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 17.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி பிளே ஒப் சுற்றை உறுதிசெய்துகொண்டது. சன்ரைசஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் மூன்றாமிடத்தைப் பிடித்தது.

அத்துடன், விராத் கோஹ்லியின் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் நான்காமிடத்தைப் பிடித்து பிளே ஒப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பெங்களுரும், கொல்கத்தாவும் தலா 14 புள்ளிகளைப் பெற்ற போதிலும் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் பெங்களுருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.