பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி ஐம்பது ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்களைப் பெற்றது. ஷோன் வில்லியம்ஸ் 118 ஓட்டங்களையும் பிரன்டன் டெய்லர் 56 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
முஹம்மட் ஹஸ்னயின் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
279 ஓட்டங்களை நோக்கி பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது. என்றாலும் அணித்தலைவர் பாபர் அஸாம் 125 ஓட்டங்களையும் வஹாப் ரியாஸ் 52 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தான் அணியை பலப்படுத்தினர்.
பாகிஸ்தான் வெற்றிபெற கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டபோதிலும் அவர்களால் 12 ஓட்டங்களையே பெற முடிந்தது. பீ முஷாரபானி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள ஆட்டம் சமநிலை அடைந்தது. இதனால் வெற்றியைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் வீசப்பட்டது.
சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 2 ஓட்டங்களைப் பெற்றது. பதிலெடுத்தாடிய சிம்பாப்வே அணி 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியது.
இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச ஒருநாள் தொடரை 2-1 எனும் கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.