இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க மீது விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடையை முழுமையாக நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சுயாதீன விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
போட்டித் தொடரில் கலந்துக்கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த போது, தனுஷ்க குணதிலக்க அங்கு பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸிலுள்ள டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றம் தனுஷ்க குணதிலக்க மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மூவரடங்கிய சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தனுஷ்க குற்றமற்றவர் என அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய தனுஷ்க குணதிலக்க மீது விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடையை முழுமையாக நீக்குவதற்கு சுயாதீன விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.