October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐதராபாத்- கொல்கத்தா: “பிளே ஓப்” சுற்றுக்குள் நுழையும் அணி ?

(Photo:BCCl/IPL)

ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சார்ஜாவில் இன்று மோதுகின்றன.

இந்த ஆட்டமானது பிளே ஓப் சுற்றின் எஞ்சிய இரண்டு அணிகளை தீர்மானிக்கும் சவாலாக அமைந்துள்ளது. அதற்காக மூன்று அணிகள் காத்திருக்கின்றன.

அதில் இன்றைய ஆட்டத்தில் மும்பையை எதிர்த்தாடும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஓர் அணி என்பதுடன் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் இயோர்ன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகியன எஞ்சிய இரண்டு அணிகளாகும்.

சன்ரைசஸ் அணியைப் பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் பிளே ஓப் சுற்று மீது நம்பிக்கை வைக்கலாம் என்ற நிலைமை காணப்படுகிறது. அவர்கள் பெறும் வெற்றியின் பிரகாரமே அது தீர்மானிக்கப்படும்.

சவாலான போட்டி
ஆனால், மும்பை அணி வெற்றிபெற்றால் அதன் மூலம் பெங்களூரும், கொல்கத்தாவும் எவ்வித சிக்கலுமின்றி பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறிவிடும். மும்பையும், டெல்லியும் ஏற்கனவே பிளே ஓப் சுற்றை உறுதி செய்துள்ளன.

இந்நிலையில் எஞ்சிய இரண்டு அணிகளை தெரிவு செய்வதில் சவால் நீடிக்கிறது. அதற்கு மும்பைக்கும் சன்ரைசஸூ க்கும் இடையிலான மோதலில் பதில் கிடைக்கவுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் பெங்களூரும், கொல்கத்தாவும் தலா 14 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கின்றன.

(Photo:BCCI/IPL)

இதனால் சன்ரைசஸ் அணி வெற்றிபெற்றால் அவர்களும் 14 புள்ளிகளுடன் சமநிலையை அடைய நிகர ஓட்ட வேகத்தின் பிரகாரம் சன்ரைசஸ், பெங்களூர், கொல்கத்தா ஆகிய அணிகளின் முன்னிலை பெறும் இரண்டு அணிகள் பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறும்.

சன்ரைசஸின் நம்பிக்கை:

இன்றைய ஆட்டம் மும்பையைவிட சன்ரைசஸ் அணிக்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

அணித் தலைவர் டேவிட் வோனர், மணிஷ் பாண்டே, ஜொனி பெயார்ஸ்டோ, கேன் வில்லியம்ஸன் ஆகியோர் கடந்த ஆட்டங்களில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து ஓட்டங்களைக் குவித்துள்ளனர்.

அதே பாணியில் சிறப்பாக விளையாடினால் சன்ரைசஸ் அணி வெற்றியின் மீது எதிர்பார்ப்பு வைக்க முடியும். நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான், வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், சந்தீப் சர்மா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

மறுபக்கம் அணித்தலைவர் ரோஹித் சர்மா இல்லாமலேயே சிறப்பாக வெற்றிகளைப் பெற்ற கிரான் பொலார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இன்றும் ஓட்டங்களைக் குவித்து சவால் விடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

(Photo:BCCI/IPL)

சார்ஜா ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானது என்பதால் மும்பை அணி வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்க வாய்ப்புள்ளது.

இஷான் கிஷான், குவின்டன் டி கொக், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என துடுப்பாட்டத்தில் மிரட்டக்கூடியவர்கள் மும்பை அணியில் உள்ளனர்.

அவர்களுக்கு பக்க பலமாக கிரான் பொலார்டும் இருக்கிறார்.

வேகப் பந்துவீச்சுக்கு ஜஸ்பிரிட் பும்ரா, ட்ரென்ட் பௌல்ட், ஜேம்ஸ் பெட்டின்ஸன், ஆகியோரும் சுழல் பந்துக்கு ராகுல் சகாரும் மும்பை சார்பாக ஆற்றலை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

எனவே, சகலதுறைகளிலும் ஆற்றலை வெளிப்படுத்தினாலே சன்ரைசஸ் அணியால் வெற்றி பெற்று அடுத்த சுற்று குறித்து யோசிக்க முடியும்.