May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்ச்சைக்குள் LPL : தேசிய கீதம் பாடிய முறை தொடர்பிலும் விசாரணை!

Photo: Facebook/Lanka Premier League

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான லங்கா பிரிமீயர் லீக் (எல்.பி.எல்) போட்டிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டு சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் நடத்தப்படும் எந்தவொரு விளையாட்டு போட்டிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அவ்வாறு அனுமதியின்றி இந்த போட்டி நடத்தப்படுவது சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளார்.

இதனால் குறித்த போட்டி ஆரம்ப நிகழ்வில் தான் கலந்துகொள்ளவில்லை என்றும் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எல்.பி.எல் போட்டி ஆரம்ப நிகழ்வின் போது பிரபல பாடகி ஒருவரால் பாடப்பட்ட தேசிய கீதம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் தேசியக் கீதத்தை பாடவேண்டிய முறைமையை மீறி பாடியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பௌத்த விவகார மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளதுடன், முறையற்ற வகையில் தேசியக் கீதம் பாடப்பட்டமை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.