November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறுதிப் போட்டிக்குள் நுழைய இந்தியாவுக்கு வாய்ப்பு உண்டா?

Photo: Twitter/ BCCI

ஆசிய கிண்ணத்திற்கான டி-20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, இலங்கை அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 174 ஓட்டங்களை அடுத்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கெனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இலங்கை அணியிடமும் தோல்வியடைந்துள்ளது. இதனால் இறுதிப் போட்டிக்குள் இந்தியா செல்லும் வாய்ப்பு குறைவடைந்துள்ளது.

சூப்பர் 4 சுற்றில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள்தான் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும். அந்த வகையில் அடுத்த நடைபெறக் கூடிய மூன்று போட்டிகளின் முடிவைப் பொறுத்து இந்திய அணிக்கு அந்த சொற்பமான வாய்ப்புக் கிடைக்கக்கூடும்.

இதன்படி புதன்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்படியில்லாமல் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.

அத்துடன் பாகிஸ்தான் அணி தோற்றாலும் அடுத்து நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது.

கடைசியாக நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால்தான் இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். ஒருவேளை அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தானும் இலங்கையும் இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடும்.