இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடட் கழக அணியை வீழ்த்தி 14 வருடங்களின் பின்னர் ஆர்சனல் கழக அணி வெற்றிகொண்டுள்ளது.
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் உலகப் பிரசித்திபெற்ற ஆர்சனல் மற்றும் மென்செஸ்டர் யுனைடட் கழக அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின.
போட்டி ஆரம்பம் முதலே இரண்டு அணி வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் விறுவிறுப்பாக நீடித்தது. இருந்தாலும் முதல் பாதியில் ஒருவராலும் கோலடிக்க முடியவில்லை. அதன்படி முதல் பாதி ஆட்டம் கோலின்றியே முடிந்தது.
இரண்டாம் பாதியில் 69 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அபுமெயங் கோலடித்தார். இது 5 போட்டிகளுக்கு பின்னர் ஆர்சனல் அணி சார்பாக அவர் போட்ட முதல் கோலாகும்.
மென்செஸ்டர் யுனைடட் அணி வீரர்கள் கோலடிக்க எவ்வளவோ முயற்சித்த போதிலும் அவர்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் 1-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் கழக அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியானது இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிராக 14 வருடங்கள் கழித்து ஆர்சனல் அணி பெற்ற முதல் வெற்றியாகும்.
இதற்கு முன்னர் அவர்கள் 2006 ஆம் ஆண்டில் முதல் தடவையாக வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.