
(photo:BCCI/IPL)
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதால் இத்தகைய நிலை ஏற்பட்டது.
அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பிளே ஒப் சுற்று மீது எதிர்பார்ப்பு வைக்கலாம் என்ற நிலையில் பஞ்சாப் அணியும், வெற்றிபெற்றாலும் வெளியே என்ற சூழலில் சென்னை அணியும் களமிறங்கின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி மந்த கதியில் ஓட்டங்களைப் பெற்றது. மயன்க் அகர்வால் 26 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் லோகேஷ் ராகுல் 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான் ஆகியோரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேற பஞ்சாப் அணி 12 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிகவும் பின்தங்கியது.
என்றாலும் டிஜே ஹூடா 30 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்று பஞ்சாப் அணியை கௌரவமான நிலைக்கு கொண்டுவந்தார். இதன்போது அவர் 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளை விளாசினார்.
கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்றது. லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
154 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் பெப் டு பிலெசி ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது. இவர்கள் 9.5 ஓவர்களில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பெப் டு பிலெசி 48 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து வந்த அம்பாட்டி ராயுடுவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஒத்துழைப்பு வழங்கினார்.
ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் அம்பாட்டி ராயுடு ஜோடி 9 ஓவர்களில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தது.
ருத்ராஜ் கெய்க்வாட் 62 ஓட்டங்களையும், அம்பாட்டி ராயுடு 30 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.
எவ்வாறாயினும், இந்த வெற்றியால் சென்னை அணிக்கு எந்த பலனும் இல்லை என்பதுடன் தோல்வியடைந்த பஞ்சாப் அணிக்கே இது பேரிழப்பாகும். இவ்விரண்டு அணிகளும் தலா 6 வெற்றிகளுடன் தொடரிலிருந்து வெளியேறியது.