October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜஸ்தானை வீழ்த்தி “பிளே ஒப்” சுற்றை நெருங்கியது கொல்கத்தா

(phot0:BCCI/IPL)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை தோற்கடித்து பிளே ஒப் சுற்றுக்கான வாய்ப்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நெருங்கியுள்ளது.

என்றாலும் சன்ரைசஸ் மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான ஆட்டம் முடியும் வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் காத்திருக்க வேண்டியுள்ளது.

துபாயில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி இரண்டாவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. நித்திஷ் ராணா ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

ஆனாலும், சுப்மன் கில் – ராகுல் திரிபாத்தி ஜோடி 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை அளித்தது. ராகுல் திரிபாத்தி 39 ஓட்டங்களையும், சுப்மன் கில் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

சுனில் நரைன், தினேஸ் கார்த்திக் ஆகியோர் ஓட்டமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றினர். 12.3 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும் அணித்தலைவருக்கே உரிய பாணியில் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடிய இயோர்ன் மோர்கன், பின்வரிசை வீரர்களான ஒன்ரே ரஸலுடன் ஆறாம் விக்கெட்டுக்காக 45 ஓட்டங்களும், பெட் கமின்ஸுடன் ஏழாம் விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களும் பகிரப்பட காரணமாக இருந்தார்.

35 பந்துகளை எதிர்கொண்ட அணித்தலைவர் இயோர்ன் மோர்கன் 6 சிக்ஸ்ர்கள், 5 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 68 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

அதேபோல்,ஒன்ரே ரஸல் 25 ஓட்டங்களையும், பெட் கமின்ஸ் 15 ஓட்டங்களையும் பெற்று சிறந்த ஒத்துழைப்பு வழங்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களை பெற்றது.

ராகுல் டிவேட்டா 3 விக்கெட்டுகளையும், கார்திக் தியாகி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கடினமான இலக்கான 192 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மிகுந்த பின்னடைவுக்குள்ளானது. 5 ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

ரொபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சம்ஸன், ரியான் பராக் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் நடையைக் கட்டினர். அவர்களில் பென் ஸ்டோக்ஸ் 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஏனைய சகலரும் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஜோஸ் பட்லர் 35 ஓட்டங்களையும், ராகுல் டிவேட்டா 31 ஓட்டங்களையும், எஸ்.கோபால் 23 ஓட்டங்களையும் பெற்று ராஜஸ்தான் அணி 120 ஓட்டங்களைக் கடக்க வழிசெய்தனர்.

இருந்தபோதும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

பேட் கமின்ஸ் 4 விக்கெட்டுகளையும், சிவம் மாவி, சிவி வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற கொல்கத்தா அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.