October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்பாப்வேயை தோற்கடித்து தொடரை வென்றது பாகிஸ்தான்

(Photo:PCB Media/Twitter)

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சிம்பாப்வே அணியுடனான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சில் நிலைகுலைந்தனர்.

அவர்களின் ஆக்ரோஷத்தை எதிர்கொள்ள முடியாத சிம்பாப்வே அணி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனாலும், சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஷோன் வில்லியம்ஸ் 75 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு ஆறுதல் கொடுத்தார். பிரென்டன் டெய்லர் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க சிம்பாப்வே அணி 45.1 ஓவர்களில் 206 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் இப்திகார் அஹமட் 10 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், முஹமட் முஸா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

207 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே சவாலாக ஓட்டங்களைக் குவிக்க ஆரம்பித்தனர்.

அபிட் அலி 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் இமாம் உல் ஹக் 49 ஓட்டங்களைப் பெற்றார். அணித்தலைவர் பாபர் அசாம் 77 ஓட்டங்களையும், இப்திகார் அஹமட் 16 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.

பாகிஸ்தான் அணி 35.2 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணித் தொடரை கைப்பற்றியுள்ளது.