Photo: Twitter/OfficialSLC
30 வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
5 போட்டிகளை கொண்ட தொடரின் 4 ஆவது போட்டி செவ்வாய்க்கிழமை, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து 259 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 254 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதன்படி 30 வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இலங்கை அணி முதற்தடவையாக தொடரை கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன்னர் 1992ம் ஆண்டு நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட தொடரை, இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி, வெற்றியை தன்வசப்படுத்தியது.
இதேவேளை இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
The crowd goes wild in Colombo as 🇱🇰 beat 🇦🇺 by 4 runs to seal the #AUSvSL series! 🙌🙌🙌 pic.twitter.com/HXmIYmooLc
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 21, 2022