January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மும்பையிடம் வீழ்ந்தது டெல்லி

(photo:BCCI/IPL)

ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியுடனான ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கொண்டதால் டெல்லி கெப்பிடல்ஸ் அணி பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகின்றமை கேள்விக்குறியாகியுள்ளது.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி ஆரம்பம் முதலே கடும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். அவர் இந்தத் தொடரில் ஓட்டமின்றி ஆட்டமிழந்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஏனைய வீரர்களும் மந்த கதியிலேயே ஓட்டங்களை பெற்றார்கள். அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் பெற்ற 25 ஓட்டங்களே அணி சார்பில் ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

காயத்திலிருந்து மீண்டு வந்த ரிஷப் பாண்ட் 21 ஓட்டங்களைப் பெற்றார். டெல்லி அணி 100 ஓட்டங்களையாவது எட்டுமா என சந்தேகம் எழுந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ககிஸோ ரபாடா ஆகியோர் தலா 12 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் கொடுக்க டெல்லி கெப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் ட்ரென்ட் பௌல்ட், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

111 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக ஆடியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இஷான் கிஷான் 3 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இந்த வெற்றியின் மூலம் 13 ஆட்டங்களில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று மும்பை அணி முதல் இடத்தை உறுதி செய்து கொண்டது.

இதனால் டெல்லி அணி தனது அடுத்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே பிளே ஒப் சுற்றின்மீது எதிர்பார்ப்பு வைக்கமுடியும். டெல்லி அணி எதிர்வரும் இரண்டாம் திகதி பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.