November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனது முதல் தொடரிலேயே சம்பியனான ‘குஜராத் டைட்டன்ஸ்’

Photo: Twitter/IPL

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

15 ஆவது  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு குஜராத் மாநிலம் – ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ‘ராஜஸ்தான் ரோயல்ஸ்’ அணியும் மோதின.

இதன்போது நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் 22 ஓட்டங்களிலும், ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனை தொடர்ந்து சஞ்சு சாம்சன் 14 ஓட்டங்களிலும், தேவ்தத் படிக்கல் 2 ஓட்டங்களிலும், ஹெட்மயர் 11 ஓட்டங்களிலும், அஸ்வின் 6 ஓட்டங்களிலும், டிரெண்ட் போல்ட் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் குஜராத் அணியின் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளைளும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன்படி, ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ஓட்டங்களை எடுத்தது.

தொடர்ந்து 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சாகா 5 ஓட்டங்களுடனும், மேத்யூ வேட் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதேவேளை அணித் தலைவர் ஹர்திக் பாண்ட்யா 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன்போது, சுப்மன் கில் 45 ஓட்டங்களை பெற்றதுடன், டேவிட் மில்லர் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்படி குஜராத் அணி18.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை பெற்று ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது.

ஐபிஎல் தொடரில் இம்முறையே குஜராத் அணி அறிமுகமாகியிருந்தது. இந்த அணி அறிமுகமாகி பங்கேற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.