January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லி-பெங்களூர்: “பிளே ஓப்”சுற்றை தீர்மானிக்கப்போகும் அணிகள்?

(Photo:BCCI/IPL)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில பிளே ஓப் சுற்றை தீர்மானிக்கும் முக்கிய இரண்டு ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.

ஒரு புறம் டெல்லி கெபிடெல்ஸ் அணி துபாயில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் மறுபுறம் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி சார்ஜாவில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியையும் எதிர்கொள்கின்றன.

இந்த ஆட்டங்களில் டெல்லியும்,பெங்களூரும் வெற்றிபெற்றால் இரண்டு அணிகளுமே சிக்கலின்றி பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறலாம்.

ஆனால், இந்த இரண்டு அணிகளுமே தோல்வியடைந்தால் அது பிளே ஓப் சுற்றுக்கு அணிகளை தெரிவுசெய்வதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி, பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கும் வாய்ப்பாக அமைந்துவிடும்.

டெல்லி- பெங்களூர் சவாலான போட்டி:

மும்பை அணி ஏற்கனவே பிளே ஓப் சுற்றை உறுதிசெய்துள்ளதால் டெல்லி அணிக்கு இந்த ஆட்டம் சவால் மிகுந்ததாய் காணப்படுகின்றது. தாம் விளையாடிய 12 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ள டெல்லி அணி 14 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது.

அவர்களுக்கு இன்னும் ஓர் ஆட்டம் எஞ்சியிருந்தாலும் இன்று வெற்றிபெற்றால் பிளே ஓப் சுற்றுக்கு இலகுவாக தகுதி பெற்று அதன் பிறகு முதலிடத்தைப் பிடிக்க முயற்சிக்க முடியும். ஒருவேளை, இன்று தோல்வியடைந்தால் அது பெரும் சிக்கலை தோற்றுவிக்கும்.

ஏனெனில், ஏற்கனவே 14 புள்ளிகளைப் பெற்றுள்ள விராத் கோஹ்லியின் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இவ்வாறானதொரு கட்டத்திலேயே இருக்கிறது. .

அவர்கள் இன்று டேவிட் வோனரின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறார்கள். இன்றைய ஆட்டங்களில் டெல்லியும்,பெங்களூர் வெற்றிபெற வேண்டியது அவசியமாகும்.

சன்ரைசஸ் நம்பிக்கை:

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை 12 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று ஏழாமிடத்தில் இருக்கிறது.

இதனால் இன்றும் அதேபோன்று எதிர்வரும் 3 ஆம் திகதி மும்பையுடன் நடைபெறும் ஆட்டத்திலும் சன்ரைசஸ் அணி சிறந்த ஓட்ட வேகத்தில் வெற்றிபெற்றால் பிளே ஓப் சுற்று குறித்து ஓரளவுக்கு நம்பிக்கை வைக்க முடியும்.

 

(Photo: BCCI/IPL)

ஆனால், அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியடைய வேணடும்.

டெல்லி அணியைப் பொறுத்த மட்டில் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், ஸிகர் தவான், மார்க்கஸ் ஸடொய்னிஸ் ஆகியோர் ஆரம்பத்தில் சிறப்பாக செயற்பட்டாலும் கடந்த ஆட்டங்களில் பிரகாசிக்கவில்லை.

இவர்கள் இன்று ஆற்றலை வெளிப்படுத்தினால் மாத்திரமே டெல்லி அணியால் வெற்றி மீது நம்பிக்கை வைக்க முடியும்.

கிரான் பொலார்டின் வழிநடத்தல்: மும்பை அணியோ தலைவர் ரோஹித் சர்மா இல்லாவிட்டாலும் கிரான் பொலார்டின் வழிநடத்தலில் சிறப்பாக செயற்படுகிறது.

இன்று வெற்றிபெற்றால் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்பதால் அதற்கு அழுத்தமின்றி அவர்கள் முயற்சிக்கலாம்.

பிளே ஓப் சுற்றை தீர்மானிக்கும் ஆட்டங்கள்:

மற்றைய ஆட்டத்தில் விளையாடும் பெங்களூர் அணி தலைவர் விராத் கோஹ்லி, ஏபி டிவிலியர்ஸ், தெவ்தத் படிக்கல், வொஸிங்டன் சுந்தர் என அத்தனை வீரர்களும் ஓட்டங்களைக் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

(Photo:BCCI/IPL))

சன்ரைசஸ் ஹைதராபாத் அணி தலைவர் டேவிட் வோனரின் அபார துடுப்பாட்டத்தில் தங்கியுள்ளது.

கேன் வில்லியம்ஸன், மனிஸ் பாண்டே ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ரஸிட் கான் பந்துவீச்சிலும் பிரகாசித்தால் பெங்களூருக்கு சிறந்த சவாலை விடுக்க முடியும்.

ஆகவே, இன்றைய இரண்டு ஆட்டங்களுமே டெல்லி கெபிடெல்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், சன்சைரசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளின் பிளே ஓப் சுற்றை தீர்மானிக்கும் ஆட்டங்களாக அமைந்துள்ளன.